அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 14, 2014

மோடி அலை இல்லை! வெளிப்படுத்திய பாஜக மேலிட தலைவர்கள்!

நாட்டின் எந்தப் பகுதியிலும் மோடியின் அலை இல்லை. மாறாக அப்படியொரு தோற்றம் ஏற்படுத்துகிறது என்று மோடியின் எதிர்ப்பாளர்கள் சொல்லி வந்ததை பாஜகவின் மூத்த தலைவரான சுஸ்மா ஸ்வராஜும் இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார். அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நாடு முழுவதும் மோடியின் அலை வீசுகிறது என்றால் அவர் பாதுகாப்பான வாரணாசி தொகுதியைத் தேடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? என்பதை இப்போது பார்ப்போம். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பாஜகவின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த அவர் தனது மனைவி சரளாஜோஷி மூலம் வாரணாசியில் உள்ள ஆர்டர்லி பஜாரில் பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் அலுவலகம், திறந்து, இந்தி நாளிதழ்களில் தொகுதிக்கு அவர் செய்த சேவைகளும் பட்டியலிட்டு பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிட்டார்.


வரும் 17ம் தேதி வட இந்தியர்கள் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை வரவுள்ளது. இதைக் காரணமாக வைத்து இப்போதே தொகுதி முழுவதும் தாமரை சின்னம் மற்றும் ஜோஷியின் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி அமர்களப்படுத்தி விட்டார் ஜோஷி. வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை பாஜக மேலிடம் இன்னும் அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இதையெல்லாம் ஏன் செய்தார் ஜோஷி? எல்லாம் மோடியின் மீது ஏற்பட்ட கடுப்புதான்.

வாரணாசி தொகுதி உ.பி.யில் இருக்கிறது. இந்த மாநிலத்தின் பாஜக பொறுப்பாளராக மோடியின் நெருங்கிய நண்பர் அமீத்ஷா இருக்கிறார். இவர் தான் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் எனச் சொல்லி, வாரணாசி தொகுதி முழுவதும் கையெழுத்து முகாம்கள் நடத்தில் மோடி இங்கு போட்டியிட வேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது போக, வாரணாசி தொகுதியில் உள்ள கோவில்களில் யாகம் நடத்தி, மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்று ஊடகங்களில் செய்தி கசிய விட்டார்.

இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் உறுப்பினர் என்ற முறையில் மோடி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆவேசமாக எழுந்த முரளி மனோகர் ஜோஷி "வாரணாசி தொகுதியை மோடிக்கு ஒதுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கு கட்சித் தலைமை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. இது குறித்து என்னிடம் ஏன் ஆலோசனை செய்யவில்லை? என்ற வினா எழுப்ப, சுஸ்மா ஸ்வராஜும், முரளி மனோகர் ஜோஷிக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்ய - இவர்களை சமாதானப்படுத்த ராஜ்நாத் சிங் படாதபாடு பட வேண்டி இருந்தது.

அப்போது மோடி எதையும் பேசவில்லை. அமைதியாக இருந்து விட்டார். இதனால் கடுப்பான ஜோஷி தேர்தல் கமிட்டி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இதைச் சொல்லிக் காட்டிதான் டுவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சுஸ்மா. இதற்கிடையே இப்பிரச்சனையில் தலையிட்ட ஆர்.எஸ்.எஸ். வாரணாசி பிரச்சனையை பாஜக தலைவர்கள் சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மோடி-ஜோஷி மோதல் சொல்லும் செய்தி என்ன? குஜராத்தில் மொத்தம் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. மோடியின் அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. குறிப்பாக குஜராத்தில் வீசுகிறது என மோடி நம்பினால் குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் மோடி போட்டியிடலாம். போட்டியிட்டால் பாஜகவில் உள்ள ஒரு நபர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது குஜராத்தில் மோடி போட்டியிடாதது ஏன்? முரளி மனோகர் ஜோஷியின் வாரணாசி தொகுதியை கைப்பற்ற முயலுவது ஏன்? எல்லாம் தோல்வி பயம்தான்.

குஜராத்தில் உள்ள ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என மோடி நினைக்கிறார். ஏனெனில் சென்ற சட்டமன்ற தேர்தலின் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய போதும் அதற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கிடைத்த தொகுதிகளை விட ஒரு தொகுதி குறைவாகவே கிடைத்தது. குஜராத்தில் எதிர் கட்சியான காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. மோடியின் அலை குஜராத்தில் கடுமையாக வீசுகிறது என நம்பப்பட்ட வேளையில் கிடைத்த ரிசல்ட் இது.

இதுதவிர பிஜேபி வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி கிடைத்தது. இந்த வாக்கு சதவீதத்தை கணக்கிட்டாலும் அது சென்ற தேர்தலின் போது கிடைத்த வாக்குகளை விட குறைவுதான். இதுதான் மோடியை யோசிக்க வைத்தது. அதனால் குஜராத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட விரும்பாத மோடி வாரணாசியை குறி வைத்தார். ஆக மொத்தத்தில் வாரணாசி தொகுதியை குறி வைத்ததின் மூலம் மோடியின் அலை குஜராத்திலும் இல்லை. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை மோடி ஒப்புக்கொண்டு விட்டார்.

சுஷ்மா ஸ்வராஜ் அதை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி விட்டார் என்பதே உண்மை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைக்க போகின்றன. ராஜ்தாக்கரேவின் நவ நிர்மான் கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறது என அறிவித்தவுடன் பாஜக மேல் தலைவர்கள் ராஜ் தாக்கரேவிடம் கெஞ்சி கூத்தாடி, பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரையும் நிறுத்த வேண்டாம். மீறி நிறுத்தினால் பாஜக தோற்றுவிடும். மோடி பிரதமர் ஆக முடியாது என்றது. இதற்கு ராஜ் தாக்கரே சரி என்று சொல்லி, பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரையும் நிறுத்தாமல், சிவசேனா வேட்பாளர்களுக்கு எதிராக மட்டுமே தனது கட்சியினரை நிறுத்தியுள்ளார்.

மோடியின் அலை இந்தியா முழுவதும் வீசுகிறது என்றால் ராஜ் தாக்கரேயிடம் சென்று பாஜக ஏன் கெஞ்ச வேண்டும்? மகாராஷ்டிரத்தில் மோடியின் அலை எதுவும் இல்லை என்பதால் தானே பாஜக ராஜ் தாக்கரேவிடம் சென்று கெஞ்சியுள்ளது.

இப்படி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் மோடியின் அலை இல்லை. பிஜேபியின். செல்வாக்கும் கூடவே இல்லை. இதை தெரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவால் கெட்டோம் என்று இவர்கள் புலம்புவார்கள். ஆனால் அப்போது இந்த புலம்பலைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.

மார்ச் 14 - 20, 2014 பதிப்பு
உரிமை: 18 குரல்: 29

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y