அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 14, 2014

தேர்தலுக்கு பின் ஜெயலலிதா, மோடியை ஆதரித்தால் என்னவாகும்?

இது விரிவாக விளக்க வேண்டிய ஒன்றாகும்.

பாஜக ஆகாத கட்சி என்பதிலும், அது ஒழிக்கப்பட வேண்டிய கட்சி என்பதிலும் முஸ்லிம்களில் ஒருவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் தவிர எல்லாக் கட்சிகளும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் தான்.


பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தது போலவே கருணாநிதியும் கூட்டணி வைத்தவர். தமிழகத்தின் அனைத்து உதிரிக் கட்சிகளையும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் நிலையை ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஏற்படுத்தினார்கள்.

தங்கள் நலன் என்று வரும்போது எந்த கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களைக் கைகழுவி விடுவார்கள் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்த போது அவரே அந்த அரசை கவிழ்த்து விட்டார். நான் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்த்தினேன்; அதை நானே கவிழ்த்து பிராயச்சித்தம் தேடிவிட்டேன். இனி ஒரு போதும் பாஜகவுடன் சேரமாட்டேன் என்று தமுமுக 1999ல் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் முழங்கினார்.

ஆனால் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து கடைசி வரை அக்கூட்டணியில் அமைச்சர் பதவிகள் பெற்று ஆதாயம் அடைந்து வந்தார்.

முஸ்லிம்களை, மோடி கொன்று குவித்தபோதும் அதைக் கண்டித்து அவர் வெளியேறவில்லை. மோடியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் வந்தபோது மோடிக்கு ஆதரவாக வாக்களித்து முஸ்லிம்களுக்கு ஜெயலலிதாவைவிட அதிகக் கொடுமை செய்தவர் கருணாநிதி என்பதை மறந்து விட முடியாது.

கடந்த காலத்தை விடுங்கள். எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி சேருவார்கள் என்றால், ஜெயலலிதா மோடியை ஆதரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. கருணாநிதி மோடியை ஆதரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. கருணாநிதி மோடியை ஆதரிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நாம் வெளிப்படையான நிலையைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். இப்போது வெளிப்படையாக தெரிவது என்ன?

ஜெயலலிதா தானே பிரதமர் என்ற இலக்கு நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார். நானே பிரதமர் என்று செயல்படுகின்றார் என்பதே மோடி பிரதமராவதற்கு எதிரான நிலை என்பதைக் காட்டுகிறது.

ஆனால் கருணாநிதி தன்னைப் பிரதமர் என்று சொல்லவில்லை. காங்கிரசையும் சொல்லவில்லை. ஜெயலலிதாவை பிரதமர் என்று சொல்லமாட்டார். அடுத்து மிச்சமிருப்பது மோடிதான். தினமலர் நாளிதழ் கருணாநிதியிடம் சிறப்பு பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தது. முன்னரே கேள்விகளை எழுதிக் கொடுத்துவிட்டு, பதிலைப் பெற்று அளிப்பதுதான் பிரத்யோகப் பேட்டி.

நன்கு யோசித்து தயாரித்து வந்து பதில் சொல்லும் போதுதான் மோடியைப் பற்றிய கேள்விக்கு மோடி நண்பர் என்று கருணாநிதி பதிலளித்தார்.

இப்போது மதவாதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நீங்கள் தேர்தலுக்கு பின் பாஜகவை ஆதரிக்கும் நிலை வருமா? என்ற கேள்விக்கு அது தேர்தலுக்கு பிறகு எடுக்க வேண்டிய முடிவு என்கிறார். மாட்டேன் என்று அவரால் சொல்ல முடியவில்லை.

தேர்தல்வரை பாஜக எதிர்ப்பு, தேர்தல் முடிந்ததும் மோடிக்கு ஆதரவு என்பதை இவ்வளவு வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

இருவரும் பாஜகவை ஆதரிக்கும் நிலை வந்தால் ஆதரிப்பார்கள். இதில் கடுகளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை. ஆனால் எடுத்த எடுப்பிலேயே கருணாநிதி ஆதரிப்பார் என்பது தெரிகிறது. தான் பிரதமராவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டு தன்னால் பிரதமராக முடியாது என்ற நிலை வந்தால் அப்போது ஜெயலலிதா மோடியையும் ஆதரிக்கலாம், ராகுலையும் ஆதரிக்கலாம்.

அரசியலில் எதுவும் நடக்கும் என்று ஜெயலலிதா முன்னர் சொன்னது அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தக்கூடியது.

கருணாநிதி, மோடியை ஆதரிக்க வாய்ப்பும், ஜெயலலிதா மோடியை ஆதரிக்க குறைவான வாய்ப்பும் உள்ளபோது, ஜெயலலிதாவை மட்டும் மோடியின் ஆதரவாளர் என்று கூறுவது கருணாநிதியின் மீது ஈமான் கொண்டதால் ஏற்பட்ட கருத்தாகும்.

பி.ஜே

மார்ச் 14 - 20, 2014 பதிப்பு
உரிமை: 18 குரல்: 29

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y