அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, March 22, 2014

ஜெயலலிதா பாஜகவை விமர்சனம் செய்யாதது ஏன்?

? ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸையும், கருணாநிதியையும் மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை இதுவரை விமர்சனம் செய்யாமல் இருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் மோடி பிரதமராவதற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பாரோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.

கருணாநிதி அவர்கள், ராகுலும் மோடியும் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார்.


எனவே இடஒதுக்கீட்டுக்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது, மோடி பிரதமராவதற்குத்தான் உதவும், என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அளிக்கும் பதில் என்ன?
-அஹமது முஸ்தஃபா, கோவை

! ஜெயலலிதாவாக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும். இருவருமே தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவை ஆதரிக்கலாம் என்ற கொள்கையில் உள்ளவர்கள். மத்திய அரசில் தங்களின் பங்களிப்பு கிடைக்கும் வாய்ப்பு வந்தால் இருவருமே அதை நழுவவிட மாட்டார்கள். அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தை எடுத்து கொள்ளுங்கள். கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாஜகவை ஆதரித்தார். அவரது ஆதரவுடன் பாஜக ஆட்சி மத்தியில் அமைந்தது. ஜெயலலிதாவுக்கும் பாஜகவுக்கும் ஒத்து போகாததால் பாஜக ஆட்சியை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்.

நாமெல்லாம் இணைந்திருந்த தமுமுக, 1999ஆம் ஆண்டு நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஜெயலலிதா கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். அதற்கு பரிகாரமாக நானே அந்த ஆட்சியை கவிழ்த்து விட்டேன். இனி ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.

ஜெயலலிதா கவிழ்த்த காரணத்தினால் 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் கருணாநிதி கூட்டு வைத்து தேர்தலைச் சந்தித்தார். பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியமைந்த போது அந்த ஆட்சியில் கருணாநிதி பங்கு கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில் 2001ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் கருணாநிதி பாஜகவுடன் கூட்டு சேர்ந்தார். பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த அடித்தளமும் இல்லாமல் இருந்தும் மத்திய ஆட்சியில் பங்கு கொண்டதால் கிடைத்து வந்த ஆதாயத்தை இழந்துவிடக் கூடாது என்பதால் பாஜகவுக்கு 21 தொகுதிகளை ஒதுக்கினார். ஆனால் அந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தின் பேராதரவினால் ஜெயலலிதா தமிழக முதல்வரானார்.

1999ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை, ஐந்து ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தவர் கருணாநிதி.

இந்த இடைப்பட்ட காலத்தில் 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி முஸ்லிம்களின் ரத்தம் குடித்தார். முஸ்லிம்களின் சொத்து சுகங்களை சூறையாடினார். 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கொன்று குவித்ததை பாஜக பிரதமர் வாஜ்பாயினாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மோடி ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்று பகிரங்கமாகவே எச்சரித்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ராம்விலாஸ் பஸ்வான் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்த பல கட்சிகள் இதைக் கண்டித்தன. மோடியை குஜராத் முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தபோது மோடிக்கு ஆதரவாக வாக்களித்து, மோடி ஆட்சி கவிழ்க்கப்படாமல் கருணாநிதி காப்பாற்றினார். அன்று மோடி ஆட்சி கவிழ்க்கப்பட்டு இருந்தால் மோடியும் அவரது தலைமையில் வெறியாட்டம் போட்ட பயங்கரவாதிகளும் சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பார்கள். அதைத் தடுத்து மோடியைக் காப்பாற்றியவர்தான் கருணாநிதி.

ஜெயலலிதாவும் பாஜகவை ஆதரித்தார். ஆனால் பதவிக்காக அவர் நீண்ட நாட்கள் பாஜகவுடன் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. 13 மாதத்தில் பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட்டார்.

குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட நேரத்தில் கூட பாஜக ஆட்சியில் அங்கம் வகித்து மோடியை காப்பறியவர்தான் மோடியின் நண்பர் கருணாநிதி 


இந்த கடந்த கால வரலாறுகள் சொல்வது என்ன?

பாஜகவை ஆதரிப்பதில் ஜெயலலிதாவை விட கருணாநிதி பல படி மேலே உள்ளார் என்பதுதான் இதிலிருந்து தெரியும் உண்மை.

முஸ்லிம்கள் பெரும்பாலும் திமுகவுக்கு மட்டுமே வாக்களித்து வந்த காலத்தில் பாஜகவுடன் ஜெயலலிதா சேர்ந்ததில் முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆச்சரியமாக இல்லை. தனக்கு ஓட்டுப் போடாத முஸ்லிம்களைப் பற்றி அன்றைக்கு அவர் கவலை கொள்ளாமல் இருந்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆனால் 1967 முதல் திமுகவுக்கு வாக்களிப்பது மார்க்கக் கடமைகளில் ஒன்று என்பது போல கருதி திமுகவுக்கே முஸ்லிம்கள் வாக்களித்தனர்.

தனக்கு மட்டுமே 40 ஆண்டுகளாக வாக்களித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தின் முதுகில் குத்தும் வகையில், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, நரபலி மோடிக்கு ஆதரவான நிலை எடுத்தவர் கருணாநிதி. தேர்தலுக்குப் பின் யார் மோடியுடன் சேர அதிக வாய்ப்புள்ளது என்று சிந்தியுங்கள்!

சமீபத்தில் நடந்த ஏற்காடு இடைத்தேர்த்லின் போது பாஜகவின் ஆதரவை, ஜெயலலிதா கோரவில்லை. ஆனால் கருணாநிதி பாஜகவின் ஆதரவை பகிரங்கமாக கோரினார்.

பாஜகவுடன் அதிக நெருக்கம் திமுகவுக்கே உள்ளது என்பதை இது காட்டவில்லையா?

பாஜக ஆட்சி அமைக்க 20 இடங்கள் குறைவாக உள்ளதாக வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் திமுக 20, அதிமுக 20 இடங்களை பெற்றுள்ளதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இருவருமே பாஜகவை ஆதரிக்க முன் வந்தால், பாஜக யாருடைய ஆதரவை ஏற்றுக் கொள்ளும்?

13 மாதத்தில் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவையா? ஐந்து ஆண்டுகள் பாஜகவுடன் பசை போட்டு ஒட்டிக்கொண்டு மோடியையும் காப்பாற்றிய கருணாநிதியையா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.

ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்ற கேள்வி வந்தால் பாஜக கருணாநிதியைத் தான் சேர்ந்துக் கொள்ளும்.

மேலும் தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு முதல் எதிரி விஜயகாந்துதான். அவரது எதிர்கட்சி தகுதியைப் பறித்தவர் ஜெயலலிதா. தேமுதிகவின் உறுப்பினர்களை ஒவ்வொருவராக இழுத்துக்கொண்டு இருக்கிறார்.

விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, ஜெயலலிதாவின் பக்கம் சாய வழியில்லை. கருணாநிதிக்கு அழைப்பு வருவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது என்பதை இதுவும் காட்டுகின்றது.

மேலும் கருணாநிதி இப்போது சொல்லி இருப்பது நாட்டு மக்களை முட்டாள்களாக வைக்கும் வகையில் உள்ளது.

ராகுல், மோடி அல்லாத ஒருவர் பிரதமராக ஆதரவளிப்போம் என்கிறார். இவர் மூன்றாவது அணியிலும் இல்லை. இவர் மட்டும் 40 இடங்களில் ஜெயித்தாலும் ஜெயலலிதா பங்கு வகிக்கும் மூன்றாவது அணியிலும் இவர் இருக்க முடியாது. மோடி, ராகுல் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வது தவிர இவருக்கு வேறு வழியில்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மோடி, ராகுல் அல்லாத ஒருவரை பிரதமராக்குவேன் எனக் கூறுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆகும். இதில் பாதிக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி, அல்லது கூட்டணி தான் ஆட்சி அமைக்க முடியும். அதாவது 272 உறுப்பினர் ஆதரவு வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக ஊடகங்கள் என்னதான் ஊதிப் பெரிதாக்கிக் காட்டினாலும் 150 முதல் 200 இடங்களை தாண்டாது. காங்கிரஸ் 100 முதல் 150 இடங்களை பெபெற்றாலும், மீதி 243 இடங்கள் மாநிலக் கட்சிகளுக்குதான் கிடைக்கும்.

ஆட்சி அமைக்க மூன்று விதமான முயற்சிகள் நடக்கும். நம்முடைய கணிப்பின் படி திமுக, அதிமுக தவிர மற்ற மாநில கட்சிகள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கலாம்.

அல்லது பாஜக ஆட்சி அமைக்கலாம்.

பாஜக ஆட்சி அமைய மாநிலக் கட்சிகள் ஆதரவு அளிக்கும் வாய்ப்பு குறைவு.

ஆட்சி அமைப்பதற்கு மூன்று வகை முயற்சிகள் நடக்கும். அப்போது பாஜக முதல் தேர்வாக திமுகவைத்தான் தேர்வு செய்யும்.

நான், மோடி பிரதமராக ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினாலும், கருணாநிதி கூறினாலும் அது தேர்தலுக்காக அளிக்கப்படும் பொய்யான உறுதி மொழியாகவே இருக்கும்.

வாய்ப்பு கிடைத்தால் இருவருமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். அப்படி ஒரு நிலைவந்தால் பாஜக திமுகவை தான் கட்டித் தழுவும் என்பதுதான் நமது கணிப்பு.

பாஜக வரக்கூடாது என்பதுதான் நமது எண்ணம். ஆனால் இரு கட்சிகளுமே, நமக்கு இந்த விஷயத்தில் மதிப்பளிக்கமாட்டார்கள்.

தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சி அமைக்க உதவாமல் எதிர்க்கட்சி வரிசையில் ஜெயலலிதா அமர்ந்தால் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முஸ்லிம்களின் அமோக ஆதரவைப் பெறுவார். பாஜக ஆட்சி அமைக்க அவர் மீண்டும் உதவினால் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் கடும் கோபம், கருணாநிதிக்கு சாதகமாக அமையும் என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறோம்.

மார்ச் 21 - 27, 2014 பதிப்பு
உரிமை: 18 குரல்: 30

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y