அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, March 25, 2014

அதிமுக விற்கு ஆதரவாக ஏன் பிரச்சாரத்தில் இறங்கவில்லை ?

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்காக ஆணையம் அமைத்த காரணத்தால் அதிமுகவை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் நமது கொடிகளைக் காணவில்லை. மாநில நிர்வாகிகளின் சூறாவளிப் பிரச்சாரத்தையும் காணவில்லை. இதற்குக் காரணம் என்ன?

பி.ஜே அவர்களின் பதில் :
எந்தக் கட்சியை நாம் ஆதரிப்பதாக இருந்தாலும் தார்மீக ஆதரவு என்றால் அதற்கு எந்தச் செலவும் இல்லை. ஆனால் தீவிரப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அதற்கு பெரிய அளவில் பொருட் செலவு தேவைப்படும். நம் ஜமாஅத்தில் இது போன்ற பணிகளுக்குச் செலவிட எந்த நிதியும் இல்லை.
மார்க்கப் பணிகளுக்காக மக்கள் தரும் நிதியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால், இது, நிதி அளித்த மக்களை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்; மார்க்கத்திலும் இது பாவமாக ஆகிவிடும்.


தேர்தல் பிரச்சாரச் செலவுகளை நாம் ஆதரிக்கும் கட்சிகளே ஏற்றுக் கொண்டால்தான் நாம் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியும்.
தேவையான பணத்தை வந்து வாங்கிக் கொண்டு பிரச்சாரத்தை ஆரம்பியுங்கள் என்று, நாம் ஆதரிக்கும் கட்சியின் சார்பில் நம்மிடம் சொல்லப்பட்டது.
மாநில நிர்வாகிகள் ஆலோசனை செய்து, எக்காரணம் கொண்டும் பணமாகப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று முடிவெடுத்து அம்முடிவை அவர்களிடம் உறுதிபடக் கூறிவிட்டோம்.

பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்தப் பொறுப்பில் மேடை உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள்! சூறாவளிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான பிரச்சார வாகனங்களைத் தந்து அதற்கான செலவுகளையும் உங்கள் பொறுப்பில் செய்தால் பிரச்சாரம் செய்கிறோம். துண்டுப் பிரசுரங்களுக்காக நாங்கள் வாசக மேட்டர் தருகிறோம். துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு தாருங்கள் என்று விளக்கமாக அவர்களிடம் சொல்லிவிட்டோம்.

தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் இதையெல்லாம் எங்கள் பொறுப்பில் செய்தால் வேட்பாளரின் கணக்கில் சேர்ந்துவிடும். சட்ட சிக்கல் ஏற்படும் என்று எங்களிடம் அவர்கள் விளக்கினார்கள்.
அவர்கள் கூறுவது நியாயமான காரணமாக இருந்தாலும் நாம் கூறுவது அதை விட நியாயமாக இருப்பதால் தீவிரப் பிரச்சாரப் பணிகள் செய்யப்படாமல் உள்ளன.

கடந்த காலங்களில் செலவுகளுக்காக பணத்தைப் பெற்று முறையாகச் செலவிட்டு கணக்குகளையும் மீதிப் பணத்தையும் நாம் ஒப்படைத்துள்ளோம்.
அவர்களின் பணத்தில் அவர்களுக்காக செலவிட்டாலும் ஏதோ நமக்காக பணம் தந்ததுபோல அவர்களின் போக்கு மாறிவிடுவதை நாம் கண்டோம். நமக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் தூய்மையாக நடந்து கொண்டாலும் பணம் பெற்றபின் நம்மிடம் கூடுதல் மரியாதையை அவர்கள் எதிர்பார்ப்பதை நாம் அவ்விடத்தில் உணர்ந்தோம்.

பணம் வாங்கி தேர்தல் பணி செய்யும் போது மற்றவர்கள் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியை தேர்தல் பணிகளுக்காக செலவிடுவார்கள். அது போல்தான் அவர்கள் நம்மையும் கருதுவார்கள். எவ்வித ஆதாயமும் இல்லாமல் உழைக்க முடியுமா என்றும் அவர்கள் கருதுவார்கள் மறுமை நன்மைக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் மனிதன் பணியாற்ற முடியும் என்பதை உண்மை முஸ்லிம்கள் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எக்காரணம் கொண்டும் பணமாக வாங்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். நம் நிலைப்பாட்டுக்கு ஏற்ப நம்மைப் பயன்படுத்திக் கொண்டால், நம்மை பயன்படுத்திக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற சின்னம் என்று அவர்களே பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தெரிவித்துவிட்டோம்.
நமக்கும் மற்றவர்களுக்கும் இன்னொரு முக்கிய வித்தியாசம் உள்ளது.
அதிமுகவினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அனைத்து கூட்டணிக் கட்சி பிரமுகர்களையும் மேடையில் ஏற்றி ஒரே செலவில் அனைவரது பிரச்சாரத்தையும் அவர்கள் பெற்றுவிட முடியும்.

மற்ற மேடைகளின் மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் என்பதால் நாம் அதில் ஏற முடியாது. எனவே நமக்காக தனி மேடைகள் அமைப்பது அவர்களுக்கு இரட்டைச் செலவாகிவிடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த வரம்பை இது தாண்டிவிடும்.
மானமும், மரியாதையும், நாணயமும், நம்பிக்கையும்தான் எங்களுக்கு முக்கியமானது என்ற கொள்கை முடிவின் காரணமாக இது போன்ற நிலை ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுதி பொறுப்பாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம்.
நாம் ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போய் கொடியைத் தூக்கிக் காட்டும் கலாச்சாரத்தை நாம் எப்போதுமே தவிர்த்து வந்துள்ளோம்.
நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டும் வகையில் இரண்டு மூன்று கொடிகளைப் பறக்க விடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் அதிமுக கூட்டங்களில் நம்முடைய கொடிகளைப் பார்க்க முடியவில்லை. இது வழக்கமாக நாம் கடைப்பிடிக்கும் நிலைப்பாடுதான்.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/admk-precharam-atharavu/

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y