அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, November 10, 2013

பொய் வழக்குகளுக்கு எதிராக டிஎன்டிஜே போராடாதது ஏன்?

?பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயீல் உள்ளிட்ட மூவர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அவர்களுக்காகப் போராடவில்லை?
ரஃபீக், மேலப்பாளையம்.



!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் இயக்கமாகும். 
எதில் தலையிட்டாலும் அதில் ஒட்டு மொத்த சமுதாய நன்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்குமா என்று ஆய்வு செய்துதான் எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடும். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


அந்த மூவர் மீது போடப்பட்ட வழக்குகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் மீது போடப்பட்ட சில வழக்குகள்; பொய்யானவை என்று கருத முகாந்திரம் உள்ளது. 

இந்துத்துவா இயக்கத்தினர் சிலர் கொல்லப்பட்ட வழக்கில் முஸ்லிம் அல்லாதவர்கள் முன்னரே கைது செய்யப்பட்டனர். என்ன காரணத்துக்காக அவர்கள் கொல்லப்பட்டனர் என்று டிஜிபி அவர்களின் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டது. இம்மூவர் பிடிபட்டவுடன் அந்த வழக்குகளும் இவர்கள் மீது போடப்படுகிறது என்றால் இதில் உண்மை இருக்க முடியாது என்பது தெரிகின்றது. அதை தக்க முறையில் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்வழக்குகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது. எவற்றைப் பொய் வழக்குகள் என்று சொல்வதற்கு முகாந்திரம் உள்ளதோ அவற்றைக் குறித்துத் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.


ஆனால் அத்வானி வருகையின் போது கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு சம்மந்தமான வழக்கில் காவல் துறை இம்மூவரையும் சேர்த்தார்கள். இவர்களைத் தீவிரமாகத் தேடினார்கள்.
இவர்களுக்கு அந்தக் குற்றத்தில் தொடர்பு இல்லாவிட்டால் அவர்கள் ஓடி ஒளிந்திருக்க கூடாது. காவல் துறையின் கையில் சிக்கினால் சித்திரவதை செய்ய வாய்ப்பு உண்டு என்று அவர்கள் கருதினாலும் அவர்கள் ஓடி ஒளிந்திருக்கக் கூடாது.


காவல் துறையினர் சித்திரவதை செய்வார்கள் என்பது உண்மை என்றாலும் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடைந்தால் காவல்துறையினர் சித்திரவதை செய்ய முடியாது. இவ்வாறு சரணடைந்து தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிப்பதுதான் அவர்களின் கடமையாகும்.
அல்லது அந்தக் குற்றத்தில் இவர்களுக்கு தொடர்பு இருந்தால் நாங்கள்தான் செய்தோம் என்று சொல்லி சரணடையலாம்.


ஆனால் இவர்கள் ஓடி ஒளிந்ததை நாம் ஆதரிக்க முடியாது. ஆதரிக்கக் கூடாது. ஓடி ஒளிந்ததால் இவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும், சம்மந்தமில்லாதவர்களும், எந்த வகையிலாவது இவர்களை அறிந்தவர்களும் எனப் பலரும் காவல் துறையால் பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது பற்றி இவர்கள் கட்டாயம் கவலைப்பட்டு இருக்க வேண்டும்.


இவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களும், செல்வந்தர்களும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகி ஒட்டு மொத்த சமுதாயமே வன்முறைக்கு ஆதரவாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பக்கம் பக்கமாக ஊடகங்களில் எழுதித் தள்ளினார்கள்.


ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறதே என்பதற்காகவாவது இவர்கள் சட்டப்படி இந்தப் பிரச்சனையைச் சந்தித்து இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகள் என்று எழுதுகிறார்களே! பல்வேறு கற்பனைக் கதைகளை எழுதி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நடுநிலையாளர்கள் வெறுக்கும் நிலை நம்மால் ஏற்பட்டு விட்டதே என்ற அக்கறையாவது இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
அப்படி இருந்திருந்தால் நீதி மன்றத்தில் சரணடைந்து இருக்க வேண்டும்.


இஸ்லாம் மார்க்கம் வேகமாக வளர்ச்சி பெறுவதை பொறுக்க முடியாதவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளில் எந்த குறையையும் சொல்ல முடிவதில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்பது மட்டுமே இவர்களின் ஒரே வழிமுறையாக உள்ளது.


ஓடி ஒளியும் இவர்களைப் போன்றவர்கள்தான் இந்த விஷமப்பிரச்சாரத்துக்கு தீனி போடுகிறார்கள். களத்தில் இருப்பவனைப் பற்றி கதையளந்தால் சம்மந்தப்பட்டவர்கள் அதை மறுக்க முடியும். ஓடி ஒளிபவர்கள் எந்த மறுப்பும் சொல்ல முடியாது என்பதால் இதை நல்ல வாய்ப்பாக இஸ்லாத்தின் எதிரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


இஸ்லாத்தைப் பற்றி அறிமுகம் செய்து நாம் அழைப்பு விடுக்கும் போது ஏன் குண்டு வைக்கவா என்று ஒற்றை வரியில் மறுப்பதை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். தாவாப்பணியை இது எந்த அளவுக்கு பாதித்து உள்ளது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம்.
சர்வதேச அளவுக்கு மீடியாக்கள் இவர்களைப் பற்றி பில்டப் கொடுப்பதால் அதற்கு ஆசைப்பட்டு அதில் பெருமைப்பட்டு ஓடி ஒளிந்தார்களா என்றும் நினைக்கத் தோன்றுகிறது.


ஓடி ஒளிந்ததால் இவர்களால் சமுதாயத்துக்குத் தலைகுனிவும் இழிவும்தான் ஏற்பட்டுள்ளது என்று நாம் கருதுகிறோம்.
எனவேதான் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமல்ல; எந்த இயக்கமும் இவர்களுக்காக இவர்களின் மீது சில பொய் வழக்குகள் போட்டுள்ளதற்காக போராட முன்வரவில்லை. பொய் வழக்கு என்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? என்ற ஒரு கேள்வியில் அனைவரின் வாயையும் அடைக்கச் செய்து விடுவார்கள்.
இதே பைப் வெடிகுண்டு வழக்கில் சம்மந்தமில்லாத ஒருவர் சேர்க்கப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தாரும் நண்பர்களும் நம்மைத் தொடர்பு கொண்டனர். அவருக்கு சம்மந்தம் இல்லை என்பதை நாம் நன்கு உறுதி செய்து கொண்டு உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிலவரத்தைத் தெரிவித்தோம். 


சம்மந்தப்பட்டவர்களை நீங்கள் கைது செய்யலாம். சம்மந்தமில்லாதவர்களைப் பொய்யாக வழக்கில் சேர்த்தால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தோம். அவருக்கு சம்மந்தமில்லை என்பதை உரிய முறையில் நாம் நிருபித்ததால் அவரை அனுப்பிவிட்டார்கள்.
இவர்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் பொய்வழக்கு போட்டுள்ளார்கள் என்றால் இவர்கள் நம்பக்கூடிய எந்த இயக்கத்தை அணுகினாலும் அவர்கள் உதவி செய்திருப்பார்கள்.
ஓடி ஒளிந்ததன் மூலம் தங்களுக்கு சம்மந்தம் உள்ளது என்று இவர்களே காட்டிக் கொண்ட பின் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கும் இவர்கள்தான் காரணம்.
இவர்களின் இந்த ஓடி ஒளிந்து பிடிபட்ட செய்தி கோவை குண்டு வெடிப்பின் போது ஏற்பட்டதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தி விட்டது.
இவர்கள் ஏதோ குடை உற்சவத்தில் குண்டு வைக்க இருந்தார்கள் என்று புளுகு மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோவிலுக்கு வரும் பொதுமக்களையும் இவர்கள் கொல்லக் கூடியவர்கள் என்ற கருத்துருவாக்கம் ஏற்பட்டது.


இன்று எந்த முஸ்லிமுக்கும் வாடகைக்கு வீடு கிடைக்காது. முஸ்லிம்களை வேலைக்குச் சேர்க்க மாட்டார்கள். பணியாற்றும் இடங்களில்கூட முஸ்லிம்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.
பிஞ்சுக்குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் கூட அந்தக் குழந்தைகள் குத்தி காட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதன் பின்னர் எந்தப் பிரச்சனைக்கு காவல் துறையையும் மற்ற அதிகாரிகளை அணுகினாலும் பாகிஸ்தான்காரனைப்போல் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது.


தாடி வைத்தவன் எல்லாம் சோதிக்கப்படவும், பள்ளிவாசல் தோறும் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிக்கவும், ஊடகங்கள் கதை எழுதவும் இவர்களே காரணமாகி விட்டார்கள்.
நீங்கள் மூவரைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். நாங்கள் ஒட்டுமொத்த சமுதாயம் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் கவலைப்படுகிறோம்.
முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வே இதுதான். இதைப் பேசினால் நமக்கு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று அவர்களும் வாய்திறக்கத் தயங்குகிறார்கள்.
ஒருவன் ஒரு வழக்கில் தலைமறைவாக இருந்தால் அதன் பின்னர் நடக்கும் ஏராளமான குற்றங்களை அவன் தலையில்தான் போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.



இவர்கள் ஓடி ஒளிந்ததால் இடைப்பட்ட காலத்தில் நடந்த எல்லா குற்றங்களும் இவர்கள் மீதுதான் சுமத்தப்படும். 
இது போன்ற செயல்களைச் செய்வதற்காகவே இவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர் என்று சித்தரிக்கும் போது அதை மற்றவர்கள் நம்பும் படியாகவும் அமைந்துவிடும்.
பல்வேறு பொய் வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டாலும் அது இவர்களாகத் தேடிக் கொண்டதுதான்.
இதைச் சொல்வதால் என்னையும் அவர்கள் பட்டியலில் சேர்த்தால் அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
இஸ்லாத்துக்கும், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எது நன்மையோ அதைத்தான் நாம் சொல்லமுடியும்.

உணர்வு வார இதழ் 
பதிலளிப்பவர் : பிஜே

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y