அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, February 15, 2011

பள்ளி சீருடையும் பாலியல் வன்முறையும் -அதற்க்கு இஸ்லாம் அளிக்கும் தீர்வும்.

அன்பார்ந்த சகோதரர்களே இன்று நாட்டில் நடக்கும் அதிகமான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணமே சிறு பிராயம் முதல் உடை விசயத்தில்  கட்டுப்பாடற்ற சுதந்தரமும் ஒரு காரணம் பள்ளியில் துவங்கும் இந்த ஆடைகுறைப்புக் கலாச்சாரம் கல்லூரி மற்றும் அலுவலகம் என நீண்டு கொண்டே செல்கிறது தினமலரில் வெளியான பள்ளி சீருடைகளும் பாலியல் வன்முறையும் என்ற இந்த கட்டுரையை நாம் இங்கே பதிவதற்கு ஒரு காரணம் மேலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வுகளையும் இத்துடன் கீழே இணைத்துள்ளோம் இக்கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் கருத்திடலில் பதியலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்.  

பள்ளி சீருடையும் பாலியல் வன்முறையும்  
வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.


பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும். 


முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.


அதிலிருந்து...

மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின்பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.


சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.


அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.


பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.


ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. 

இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.


சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.


பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.


நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.

பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...



இஸ்லாத்தின் தீர்வு 

ஹிஜாப்
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
'
ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேசுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால்அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர்ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும்பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.


சகோபிஜே எழுதிய இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா நூலில் இருந்து  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y