அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, August 24, 2014

திருச்சியில் இன்று நடைபெற்ற TNTJ யின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழகம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் 2014 அக்டோபர் மாதம் முழுவதும் (24.08.14 - ஞாயிறு) ”தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்” நடத்தப்படும் என்று திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய முழுவிபரம் வருமாறு:

மாநில செயற்குழு தீர்மானங்கள்

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.

இதன் காரணமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் தீவிரவாத சமுதாயமாக, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக பொது மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வின் போதும் எல்லா முஸ்லிம் இயக்கங்களும் அதை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விடுகின்றனர். பள்ளிவாசல்களில் இதைக் கண்டித்து உரைகள் ஆற்றப்படுகின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் பிரமுகர்கள் இதற்காகக் கவலைப்படுகின்றனர்.
ஆனாலும் முஸ்லிம் சமுதாயமும் அதன் தலைவர்களும் இது போன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார்கள் என்ற உண்மை, ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில்லை.

முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதையும், முஸ்லிம்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுவதையும் சமுதாயம் சந்தித்து வருகிறது. தனியார் பள்ளிக் கூடங்களில் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவே கல்வி மறுக்கப்படுகிறது. பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான முகச்சுளிப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் மக்களையும், வார்த்தைகளால் வேதனைப்படுத்தும் மக்களையும் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வருகிறது. பேருந்து, ரயில் பயணங்களில் கூட இது போன்ற நிலையை முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம் பெண்களும் கூட இதில் விதிவிலக்கில்லை.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பலருக்கு அரசு வழக்கறிஞர்கள் தான் நியமிக்கப்பட்டனர். சமுதாயம் அவர்களுக்கு உதவ மறுத்ததால் அரசாங்கமே வழக்கறிஞர்களை இலவசமாகச் செய்து கொடுத்ததை இதற்கு உதாரணமாக கூறலாம். 


தீவிரவாதச் செயல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது எனும் போது அது போன்ற செயல்களை முஸ்லிம்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது கூட முஸ்லிமல்லாத மக்களுக்குப் புரியவைக்கப்படவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தில் யுதம் தாங்கி நடத்தப்படும் ஜிஹாத் எனும் புனிதப் போர் தனி நபர்கள் செய்வதல்ல. ஒரு இஸ்லாமிய அரசாங்கம் தன் மீது போர் தினிக்கப்படும் போது நாட்டு மக்களைக் காப்பதற்காக நடத்தும் போரே ஜிஹாத் எனும் போராகும் என்ற உண்மை மறைக்கப்பட்டு சில மூடர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் இஸ்லாம் மார்க்கத்தின் செயலாகவும் பார்க்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்,


ஆனால் இஸ்லாமிய மார்க்கமும், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் இந்த தீவிர வாதச் செயல்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளனர். இஸ்லாம் என்பது அன்பு மார்க்கம். அது மனித உயிர்கள் மட்டுமல்லாமல் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் கருணை மார்க்கம், ஒரு உயிரை வாழ வைத்தவன் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போன்றவன். ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது ஒட்டு மொத்த உலக மக்களையும் கொலை செய்வதைப் போன்றதாகும் என்று திருக்குர்ஆன் மூலம் போதிக்கும் பக்தி மார்க்கம்தான் இஸ்லாம். 


இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை என்பதையும், முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதையும் முஸ்லிம் அல்லாத சமுதாய மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடமையை நிறைவேற்றும் முகமாக கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், மற்றும் கண்காட்சிகள் வாயிலாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என இச்செயற்குழு தீர்மானித்துள்ளது. 


இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஒருமாத காலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், அனைத்து கிளைகளும் இந்த தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தும் எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இதில் பங்கெடுத்து முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதையும், இஸ்லாம் மார்க்கமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் பிற சமுதாய மக்களுக்குப் புரியவைக்க வெண்டும் எனவும் இச்செயற்குழு முஸ்லிம் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறது.

இந்திய அரசு இஸ்ரேல் தூதரக உறவை முறிக்க வேண்டும் .

உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தின் மக்கள் மீது மிருகவெறியாட்டம் நடத்தி அப்பாவிப் பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த நியாயமும் இல்லை. அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்கும் வட்டி வாங்குவதற்கும் உலக நாடுகள் மௌனமாக இதை அங்கீகரிக்கின்றன. இருந்த போதிலும் இஸ்ரேலின் இன அழிப்பைக் கண்டித்து இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈகுவடார், பிரேசில், பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு இஸ்லாமிய சமுதாயம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்நாடுகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் தாயகமான இந்தியாவிற்கு இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். 


மத்திய பிஜேபி அரசாங்கம் அநியாயக்கார இஸ்ரேலைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்குக் கூட தயங்கும் ஈனச் செயலை இச்செயற் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்திய அரசாங்கம் மனித குல எதிரியான இஸ்ரேலுடனான தூதரக உறவை முறிக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை

அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்களின் அறிவை மழுங்கடித்து அவர்களைப் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்றெல்லாம் கூறி ஏமாற்றி அவர்களின் சொத்துக்களையும், பெண்களின் கற்பையும் சூறையாடும் அனைத்து சமுதாயங்களிலும் உள்ள மந்திரவாதிகளையும், சூனியக்காரர்களையும் சமூக விரோதிகளாக அறிவித்து, வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர்களை இந்தச் செயற்குழு வேண்டிக்கொள்கிறது. மேலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வித்தைகளுக்கு அஞ்சாமல், இவை அறிவிற்கும், இறைநம்பிக்கைக்கும் எதிரானது என்பதை விளங்கி பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களை இச்செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

தஸ்லீமா நஸ்ரினுக்கு விசா நீட்டிப்பு செய்த மத்திய அரசிற்கு கண்டணம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் என்றும், பெண்கள் ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும் ஒட்டு மொத்த உலகப் பெண்களையும் விபச்சாரிகளாக மாற்றும் கேடு கெட்ட கொள்கையை நோக்கி அழைப்பவர்தான் தஸ்லீமா நஸ்ரின் என்பவர். பெண்களுக்கு கற்பொழுக்கம் அவசியம் என்பதை கொள்கையாகக் கொண்ட பெரும்பான்மை மக்களை கொண்ட இந்திய நாட்டில் இது போன்ற கேடுகெட்ட கொள்கையைக் கொண்டவளுக்கு அடைக்கலம் தருவது வெட்கக் கேடானதாகும். ஆனால் மத்திய அரசாங்கம் தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் ஒட்டு மொத்த சமுதாய மக்களுக்கும் எதிரான கொள்கையைக் கொண்ட, இந்துக்களின் பண்பாட்டுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட தஸ்லீமா நஸ்ரினுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதுடன் ஒரு வருட விசா நீட்டிப்பும் செய்துள்ளது. 


மத்திய உள்துறை அமைச்சகத்தின் இச்செயலை ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் சார்பாகவும், ஒழுக்கத்தை விரும்பும் அனைத்துப் பொதுமக்கள் சார்பாகவும் இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கிறது. தஸ்லீமா நஸ்ரினுடைய விசாவை ரத்து செய்துவதுடன், அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் முறை

இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் நல்லிணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா என்ற பெயரில் மதவெறி பிடித்த புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கை அரசும் மதவெறியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றது.


இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லிம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பூரண மதுவிலக்கு

மதுபானங்களும், இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும், கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டைக் குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது.
வருவாயை விட நாட்டு மக்களின் நலனும், நிம்மதியும், ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து கேரள மாநில அரசாங்கம் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு முயற்சி செய்வது போல் உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தச்செயற்குழு வற்புறுத்துகிறது.
மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ரம்ஜான் , ஹஜ்ஜூப் பெருநாளைக்கு சிறப்பு ரயில்

இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயம் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமாகத் திகழ்கிறது. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் அவ்விழாக்களைக் கொண்டாடும் மக்கள் தங்களின் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக இரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இது போன்று ஏராளமான இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களும் தங்களுடைய பெருநாட்களின் போது சொந்த ஊர் திரும்புவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரம்ஜான், மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் காலகட்டங்களிலும் இது போன்ற சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கும், இரயில்வே துறைக்கும் இச்செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் வெள்ளிக் கிழமை தொழுகைக்கு அனுமதி கொடுக்க கோரிக்கை

கிறித்தவ சமுதாய மக்கள் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவது போல் வெள்ளிக் கிழமை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ”ஜூம்ஆ” எனும் சிறப்பு வழிபாட்டிற்குரிய நாளாகும். ஆனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி கொடுப்பதில்லை. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை மதிய நேரத்தில் 12 : 30 முதல் 2 மணி வரை இஸ்லாமிய மாணவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிக் கூட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தர விட வேண்டும் என தமிழக அரசிற்கு இச்செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

வளைகுடா பணியாளர் அவலம்

வளைகுடா பணியாளர்களில் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளைச் செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்தியத்தூதரகங்களின் அலட்சியப் போக்கு
அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும், ஆணவத்துடனும், பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய தூதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்களின் பாதிப்பை முறையிடுவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வெளிநாட்டினர் பாதுகாப்பு மையம் துவங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அரசுத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப் படுவதை கண்காணிக்க குழு அமைத்தல்

மத்திய மாநில அரசாங்கங்கள் இஸ்லாமியர் நலனுக்காக எத்தகைய திட்டங்களை தீட்டினாலும் அதன் பலன் சிறிதளவு கூட இஸ்லாமிய மக்களைச் சென்றடைவதில்லை. இஸ்லாமிய மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. எனவே இஸ்லாமியர் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் பெயரளவில் இல்லாமல் அதன் பலன் உண்மையில் மக்களைச் சென்றடைகிறதா? என்பதைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு இச்செயற்குழு கோரிக்கை வைக்கிறது.

ஆர்.எஸ். எஸ் . மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு கண்டணம்

நமது இந்தியநாடு ஒரு மதச் சார்பற்ற நாடாகும். மதச் சார்பற்ற தன்மையின் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சாசனம் நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் ”இந்தியா இந்து நாடு என்றும், இந்துத்துவம் அதன் அடையாளம் என்றும், பேசிய பயங்கரவாத ஆர்.எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் என்பவரின் இந்த விஷமக் கருத்தை இச்செயற்குழு வன்மையாக்க் கண்டிக்கிறது.
இந்திய விடுதலைக்கு தங்கள் உயிராலும், உடலாலும், செல்வத்தினாலும் பாடுபட்டவர்கள் இந்திய முஸ்லிம்கள். இந்த உண்மையை மறைத்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இந்த நாட்டில் விருந்தினராக எண்ணி நடந்து கொள்ள வேண்டும் என்று பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியாவை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
விசமனத்தனமான கருத்துக்களைத் தெரிவிக்கும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களைக் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசையும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் தீவிரவாதக் கருத்துக்களை பரப்பும் இவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும் கண்டணம் தெரிவிக்க வேண்டும் என்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் இந்தச் செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

:முதல்வர்களை இழிவு படுத்திய பிஜேபி க்கு கண்டணம்

இந்தியப் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் ஆவார். மோடி பிரதமர் என்பதை மதித்து அவருடன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள் பிஜேபி கட்சியினரால் மேடையில் வைத்து ஏளனப்படுத்தப்பட்டார். ஒரு மாநில முதல்வர் ஏளனப்படுத்தப்படும் போது கூட அதைக் கண்டிக்காமல் இருந்த பிரதமரின் செயலால் நாடே வெட்கித் தலைகுனிகிறது. மோடி தான் ஒரு பிரதமர் என்பதை உணராமல் ஒரு இந்துத்துவாதியாகவே செயல்பட்டு வருகிறார் என்பதையே இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது. இன்னும் இந்தியாவின் மதிப்பை சர்வதேச வகையில் சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது. மாநில முதல்வரை இழிவுபடுத்திய இச்செயலை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

:உபி முஸாபர் நகர் கலவரத்திற்கு கண்டணம்

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டு இன்றளவும் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். கலவரத்தை முன்னின்று நடத்திய குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாதது மட்டுமல்லமால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் கலவரத்தை முன்னின்று நடத்திய பிஜேபி யின் எம்பி மற்றும் எம்எல்ஏக் களுக்கு பாராட்டு விழா நடத்திய மதவாதக் கட்சியான பிஜேபி யை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பாபரிமஸ்ஜித்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இச்செயற்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.
பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கோருகிறது.
பாபர் மஸ்ஜித் இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்த அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமியை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற ஒரு நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபடும் என்றால் முஸ்லிம்கள் அதை எதிர்கொள்ள வேண்டிய வகையில் எதிர்கொள்வார்கள் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்றும் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது. .
புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவும் நிறைவேற்றப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஊடகங்களின்பாரபட்சப்போக்கு

இந்துத்துவா இயக்கத்தினர் கொல்லப்படும் போதெல்லாம் உடனடியாக அந்தப்பழியை முஸ்லிம்கள் மீது போட்டு சில ஊடகங்கள் விஷமப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான கசப்புணர்வை விதைத்து வருகின்றன. கட்டப்பஞ்சாயத்து, பெண் தொடர்பு, ரியல் எஸ்டேட், கடன் தகராறு, நிலத்தகராறு, குடும்பத்தகராறு, சொந்தப்பகை அரசியல் பகை என பல காரணங்களால் கொலை நடந்திருக்கலாம். இது குறித்து தகுந்த துப்பும் தடயமும் கிடைக்கும் போதுதான் விபரம் தெரியவரும். அதுவரை கற்பனைகளை எழுதி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என ஊடகங்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது..

மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதாரயில் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்கள் மீது முதலில் பழி போடப்பட்டு பின்னர் இந்துத்துவாவினர்தான் அவைகளைச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டதையும், கர்நாடாகா பீஜப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டதும், பெங்களூர் ஹனுமான் கோவிலுக்குள் மாட்டுக்கறியை வீசி முஸ்லிம்கள் மீது பழிபோட திட்டம் தீட்டியதும் இந்துத்துவாவினர்தான் என்பதும், நெல்லை தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்ததும், திருப்பூர் அருகே சதுமுகை என்ற ஊரில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டதும், நெல்லையில் கோவில் தேருக்கு தீவைத்ததும் இந்துத்துவாவினர்தான் என்பதும் விசாரணைக்குப் பிறகு அம்பலமானதையும் இச்செயற்குழு ஊடகங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது.


குற்றங்கள் குறைய

நாட்டில் கற்பழிப்புகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. மென்மையான தண்டனைகளும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்து தீர்ப்பு வழங்கப்படுவதும் தான் இதற்கு காரணமாக உள்ளன.
சட்டம் ஒழுங்கைக் காப்பதுதான் அரசாங்கத்தின் முதல் கடமை என்பதை உணர்ந்து எந்த வழக்காக இருந்தாலும் ஐம்பது நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வகையில் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான எல்லா காரணங்களையும் களைய வேண்டும் எனவும் இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
பாலியல் வன்முறைக்குக் காரணமான அனைத்து ஆபாசங்களுக்கும் முற்றாக தடை விதிக்க வேண்டும் எனவும் இந்தசெயற்குழு வலியுறுத்துகிறது.
குற்றங்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்க வேண்டும் எனவும் இந்தியாவில் மரண தண்டனையை எக்காரணம் கொண்டும் நீக்கக் கூடாது எனவும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இச்செயற்குழு கருதுகிறது.
.
இஸ்லாத்தைத் தழுவியோருக்கானஅரசுவேலைவாய்ப்பு

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாகக் கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இச்செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

கோஎஜுகேசன் கல்வி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை

சிறுபான்மையானாலும்,பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இச்செயற்குழு ஆலோசனை கூறுகிறது.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y