அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, December 24, 2013

பெண் தூதர் தேவயானி மீது எடுத்த நடவடிக்கை சரிதானா?

தேவயானி என்ற அதிகாரி தனது வீட்டு வேலைக்காக சங்கீதா என்ற பெண்ணை போலி ஆவணம் மூலம் விசா பெற்று அழைத்துக்கொண்டார் என்பதும், அமெரிக்காவில் உள்ள வீட்டு வேலைக்கான பெண்களுடைய உரிமையைப் பறித்துக் கொண்டார் என்பதும் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு, அத்துடன் இந்த வழக்கில் அந்த அதிகாரியை பொது இடத்தில் வைத்து கைது செய்தது, கையில் விலங்கு மாட்டியது, ஆடையை அவிழ்த்து சோதனை செய்தது ஆகியவையும் சேர்ந்து கொண்டது. 



தனது வீட்டு வேலைக்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து ஒரு பெண்ணை அழைத்துச் சென்றது அமெரிக்கச் சட்டப்படி குற்றம் என்றால் அதற்காக வழக்குப் பதிவு செய்வதை குறை கூற முடியாது. அனைத்து நாடுகளிலும் குற்றச் செயலாக உள்ள போர்ஜரியைச் செய்த அதிகாரிக்கு ஆதரவாக இந்திய அரசோ இந்திய மக்களோ நடந்து கொள்ளக்கூடாது என்பது இந்தியாவில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் மற்றவர்களை விட சட்டங்களை அதிகம் மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் உலக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும். இந்தக் குற்றத்துக்காக தேவயானி கைது செய்யப்பட்டு இருந்தால் ஃபோர்ஜரியான ஆதாரங்கள் 
மூலம் தேவயானி மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்ற சங்கீதாதான் அனைத்து நாடுகளின் சட்டப்படி முதல் குற்றவாளியாவார். 

அவரது குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவரை அழைத்துச் சென்றவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று ஆகும். 

யார் ஃபோர்ஜரியான ஆதாரங்களைக் காட்டி அமெரிக்காவை ஏமாற்றினாரோ அவரைக் கைது செய்யாமல் அவரை மறைவிடத்தில் வைத்துப் பாதுகாக்கும் அமெரிக்கா அவரை வேலைக்கு அழைத்துக் கொண்ட தேவயானியைக் கைது செய்திருப்பது சட்டத்தை நிலை நாட்டும் நோக்கம் அமெரிக்காவுக்கு சிறிதும் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. 

ஃபோர்ஜரி விசா மூலம் வேலைக்குச் சென்ற சங்கீதாவின் தந்தை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் இந்தியராக இருக்கிறார். 

தனது தூதரகத்தில் பணியாற்றும் ஒருவரைப் பயன்படுத்தி வேண்டுமென்றே போலியான விசா கொடுத்து தேவயானி சிக்க வைக்கப்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. 

அமெரிக்கா ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஆணவப் போக்கை அறிந்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள். நாங்கள் எந்த நாட்டினரையும் எதுவும் செய்வோம் என்று அடிக்கடி காட்டிக் கொள்வதற்காக அந்நிய நாட்டவர்களை இழிவுபடுத்துவது அமெரிக்காவின் வழக்கமான அயோக்கியத் தனம்தான். 

துருப்பிடித்த ஆயுதம் கூட இல்லாத ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் உள்ளதாகக் கூறி அந்த நாட்டை நாசமாக்கி தனது ஆணவத்தை நிலை நாட்ட எந்த மனப்பான்மை காரணமாக இருந்ததோ அதே மனப்பான்மைதான் இதற்கும் காரணமாக இருக்க முடியும். 

தேவயானி தரப்பு கூறுவது போல இதில் திட்டமிட்ட சதி உள்ளது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியாவையும் உலக நாடுகளையும் அச்சுறுத்துவது நோக்கமாக இல்லாவிட்டால் இந்திய அரசுக்கு இந்திய தூதரகத்துக்குத் தெரிவித்துவிட்டு தேவயானியை வீட்டில் கைது செய்திருக்கலாம். 

வெளி இடங்களில் கைது செய்தாலும் கைவிலங்கு போடாமல் கைது செய்திருக்கலாம். ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யாமல் இந்தச் சட்ட நடவடிக்கையை எடுத்திருக்கலாம். இவை அனைத்தையும் மீறி தேவயானியை கைது என்ற பெயரில் இழிவு செய்திருப்பதற்கு அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மைதான் காரணம். நமது நாட்டின் பிரதமர் அமெரிக்காவுக்கு சென்ற நேரத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நமது பிரதமர் மீதே அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் வழக்குப் பதிவு செய்தது. 

முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்ட பல பிரமுகர்களை ஷுவைக் கழற்றி சோதனை செய்தது என இதற்கு நீண்ட பட்டியல் உண்டு. அமெரிக்காவின் முன்னால் அதிபரிடம் இந்திய அரசாங்கம் இப்படி நடந்து கொள்ள முடியாது. 

ஆனால் இந்தியாவின் இந்நாள் பிரதமர் மீதே நாங்கள் வழக்குப் போடுவோம் என்ற இறுமாப்புதான் இதற்கு காரணமாகும். தேவயானிக்கு முன்பாக எத்தனையோ இந்தியத் தலைவர்களும் பிரமுகர்களும் அமெரிக்க விமான நிலையத்தில் ஆடை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்டதுண்டு. அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களின் ஈடுபட்டதற்காக இப்படி நடத்தப்படவில்லை. 

அமெரிக்காவை மதித்து முறையான விசாவில் சென்றதற்காக இப்படி அவமானப்படுத்தப்பட்டார்கள். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக கோபத்தை வெளிப்படுத்தும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் இந்திய மக்களும் எவ்வித குற்ற வழக்கும் இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நம் தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்டபோது சிறு சலனத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை. 

இது ஏன்? இந்நாள் பிரதமரை விடவும், முன்னாள் குடியரசுத் தலைவரை விடவும், தேவயானி அவ்வளவு முக்கியமானவரா? இதற்கான காரணத்தையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 
இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்லி மக்களால் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் ஆட்சி செய்வது பெரிய படிப்பு படித்த அதிகாரிகள்தான். 

அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு ஆட்சி நடத்துவதால் தான் மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. இந்த உண்மையை விளங்கிக் கொண்டால் இதற்கான காரணம் விளங்கிவிடும். 

பிரதமர் நிர்வாணமாக்கப்பட்டால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டாம்; அதனால் அந்த இழப்பு ஏற்படும்; இந்த இழப்பு ஏற்படும் என்று பயம் காட்டி பிரதமரையே கோழையாக்கி விடுவார்கள் அதிகாரிகள். ஒரு அதிகாரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாளைக்கு நமக்கும் இது போல் ஏற்படும் என்று அஞ்சி அமெரிக்காவுக்கு எதிரான பாய்ண்டுகளை எடுத்துக் கொடுத்து எப்படி அமெரிக்காவுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். 

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் இருந்து வரும் பார்சல்கள் எவ்வித சோதனையும் செய்யாமல் ஒப்படைக்கப்படும் விபரத்தை இப்போதுதான் அரசுக்கு சொல்லி அதைத் தடை செய்கிறார்கள். 

அமெரிக்காவின் தூதரக ஊழியர்கள் சிறப்பு பாஸ் பெற்றுக்கொண்டு விமான நிலையத்தில் எந்த எல்லை வரைக்கும் போகலாம் என்ற சலுகை இருப்பதை இப்போதுதான் அரசாங்கத்திற்கு தெரிவித்து அதற்கு தடை போடுகிறார்களாம். ஏராளமான அமெரிக்கர்கள் துணைத்தூதர் என்று பாஸ் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுவது அதிகாரிகளுக்குத் தெரிந்தும் தங்களுக்கு பாதிப்பு என்ற பிறகுதான் அரசுக்குச் சொல்கிறார்கள். அமெரிக்க தூதரகம் உள்ள சாலை மக்களின் பயன்பாட்டுக்காக மக்கள் செலவில் போடப்பட்டது. அந்தப் பாதையை நிரந்தரத்தடுப்புச் சுவர் எழுப்பி பொது மக்களின் போக்குவரத்தையே அதில் தடை செய்துள்ளது அதிகாரிகளுக்கு முன்பே தெரிந்தாலும் இப்போதுதான் அரசுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

மேலும் எப்படியெல்லாம் இங்குள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு பாடம் புகட்டலாம் என 
யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். 

மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டுக்கு இதைவிடக் கேவலம் என்ன வேண்டும்? வெளிநாட்டு தூதர்களுக்கு என்ன சலுகைகள் என்பதற்கு நமது நாட்டில் விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளது. 

அதன்படிதான் அனைத்து நாட்டு தூதரக அதிகாரிகளும் இந்தியாவில் நடத்தப்படுகிறார்கள். அமெரிக்காவுக்கு விலைபோன அமெரிக்காவின் கவனிப்புக்கு உள்ளான தேசத்துரோக அதிகாரிகள் அமெரிக்கர்களுக்காக இந்த நாட்டுச் சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்துள்ளார்கள் என்பது இப்போது தெரிய வருகிறது. அமெரிக்கா இன்று செருப்படி கொடுத்து இருப்பதற்குக் காரணமே இத்தனை ஆண்டுகளாக இவர்கள் செய்த அடிமைத்தனம்தான். இந்திய அரசையும், இந்திய மக்களையும் அமெரிக்காவின் அடிமைகளைப் போல கருதும் நிலையை நமது உயர் அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டு தங்களுக்கு பாதிப்பு என்றவுடன் தங்களின் அயோக்கியத் தனங்களை தாங்களே அம்பலமாக்குகின்றனர். அமெரிக்காவிற்கு எதிராக இந்திய அரசும் அமைச்சர்களும் வீர வசனம் பேசியதால் இனிமேலாவது நாட்டின் மானத்தைக் காப்பார்கள் என்று சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டது. 

இந்தியச் சட்டப்படி தான் அமெரிக்கர்கள் நடத்தப்படுவார்கள் என்று நிலை நாட்டுவார்கள் என்று நாடு எதிர்பார்த்தது. 

அதற்குள்என்னநடந்ததோஎவன்விலைபோனானோதெரியவில்லை. நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று மத்திய அமைச்சர் அந்தர் பல்டி அடித்துவிட்டார். தேவயானியை அழைத்தபின்தான் பாராளுமன்றத்தில் நுழைவார் என்று கூறி 40 மணி நேரத்தில் இந்த பல்டியை அடித்துள்ளனர். இந்தியாவின் மானத்தை இவர்கள் காப்பாற்ற மாட்டார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. தேவயானியைக் காப்பாற்ற ஐநா சபைக்கான இந்திய அதிகாரியாக அவருக்கு பதவி மாற்றம் செய்தது இந்திய அதிகாரிகளுக்கும் இந்திய அரசுக்கும் கடுகளவும் மூளையோ சட்ட அறிவோ இல்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்தது. 

ஐநாவில் பணியமர்த்தப்பட்டால் அதன் பின்னர்தான் அவருக்கு சட்டப்பாதுகாப்பு கிடைக்கும் அதற்கு முன் நடந்த குற்றத்திற்கு பாதுகாப்பு கிடைக்காது என்ற சாதாரண அறிவுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. 

மொத்தத்தில் நாட்டில் மக்களாட்சி நடக்கவில்லை என்பதையும், வெள்ளைக்காரனிடமிருந்து முழு விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்பதையும் இந்தச் சம்பவம் தெளிவாக நாட்டுமக்களுக்கு புரியவைத்துவிட்டது.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/devayani-us-sariya/
Copyright © www.onlinepj.com

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y