அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, January 27, 2011

நபிவழியும், கிப்லா மாற்றமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றித் திருக்குர்ஆன் 2:142-145 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஃபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.


இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.


ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் முஸ்லிம்கள் ஏன் திரும்பி விட்டனர்?' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்' என்று இந்த வசனம் கூறுகின்றது.


முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது வந்தனர் என்பதும், இப்போது அந்தக் கிப்லாவை விட்டு விட்டு வேறு கிப்லாவுக்கு மாறி விட்டனர் என்பதும், அவ்வாறு மாறியதை அன்றைய அறிவிலிகள் விமர்சித்தனர் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.
இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் இக்கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு 144வது வசனத்தைப் பார்ப்போம்.



(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். (2:144)


முஸ்லிம்கள் முன்னர் எந்தக் கிப்லாவை நோக்கித் தொழுதார்களோ அந்தக் கிப்லாவை அல்லாஹ் மாற்ற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் ஆசையாகவும், விருப்பமாகவும் இருந் தது. இதன் காரணமாகவே கிப்லாவை மாற்றும் கட்டளைக்காக அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிப்லாவை விரும்பினார்களோ அந்தக் கிப்லாவையே நோக்குமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான் என்ற விபரங்கள் இந்த வசனத்தில் இருந்து தெரிய வருகின்றன.


முஸ்லிம்கள் இப்போது ஒரு கிப்லாவுக்கு மாறியதும், முன்னர் வேறு கிப்லாவை நோக்கித் தொழுததும் இரண்டுமே அல்லாஹ்வின் கட்டளைப் படி தான் நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


வேறு கிப்லா மாற்றப்பட்ட கட்டளை 144வது வசனத்தில் உள்ளது. ஆனால் முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்களே அதற்கான கட்டளை குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் அந்தக் கட்டளை காணப்படவில்லை. முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம் கள் நோக்கினார்கள் என்ற தகவல் தான் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.


முன்னர் நோக்கிய கிப்லா பற்றிய கட்டளை குர்ஆனில் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அந்தக் கட்டளையைப் பிறப்பித்திருப் பார்கள். நபிகள் நாயகம் சுயமாக அந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்களா? நிச்சயமாக இல்லை. ஏனெனில் முந்தைய கிப்லாவையும் நாமே நிர்ணயித்தோம் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். வந்த வழியே திரும்பிச் செல்வோரி லிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். (2:143)


மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முந்தைய கிப்லாவை நிர்ணயம் செய்திருந்தால் சுயமாக அவர் களே அதை மாற்றியிருப்பார்கள். மாற்று வதற்கான கட்டளை இறைவனிடமிருந்து வருமா என்று அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கத் தேவை இல்லை.


முந்தைய கிப்லாவை நோக்குமாறு இறைவன் கட்டளை பிறப்பித்ததும் உண்மை. அக்கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை. இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றா வது உண்மை, இறைவனின் கட்டளைகள் யாவும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைத் தூதர்களின் உள்ளங்களில் ஜிப்ரீலின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான். அதுவும் இறைக் கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.


இந்த விபரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது 'குர்ஆன் அல்லாத இன்னொரு வகையான வஹீ மூலம் அவர்களுக்கு முந்தைய கிப்லா பற்றிய கட்டளை வந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் முந்தைய கிப்லாவை நோக்கியுள்ளார்கள். இதனாலேயே புதிய கிப்லாவை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாக முன்னோக்காமல் அல்லாஹ்வின் மறு கட்டளைக்குக் காத்திருந்தார்கள்' என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ உண்டு என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.


குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர், முதல் கிப்லாவை நோக்கும் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். கியாம நாள் வரை அப்படி ஒரு கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.
மேலும் முந்தையை கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கியது எனது கட்டளைப்படியே என்று 143வது வசனத்தில் அல்லாஹ் கூறுவது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அனைத்துக் கட்டளைகளையும் அல்லாஹ் குர்ஆன் மூலம் மட்டும் கூறாமல் சில கட்டளைகளைக் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் ஏன் கூற வேண்டும்? என்று சிலருக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு அல்லாஹ் இவ்வசனத் தொடரிலேயே ஆணித் தரமாகப் பதில் அளிக்கிறான்.


வந்த வழியே திரும்பிச் செல்வோரி லிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள்! குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறக் கூடியவர்களுக்காகவே இவ்வசனம் இறங்கியது போல் உள்ளது.


முந்தையை கிப்லாவை நோக்கும் கட்டளை குர்ஆனில் இல்லை தான், ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம். 


குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேச மாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்தோம் என இறைவன் பதிலளிப்பது போல் இவ்வசனம் அமைந்துள்ளது.


அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையைக் குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத் தூதர் வழியாக அவன் பிறப்பித்துள்ளான். இறைத் தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.


எனவே குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதற்கு இந்த வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.


மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று 2:142


இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன். 2:143


(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. 2:142


வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர் 2:145 


நன்றி : பிஜே தர்ஜுமாவிலிருந்து  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y